ஒஹிய பகுதியில் அனுமதியற்ற நிர்மாணங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

424

பொரலந்த தொடக்கம் ஹோர்டன்தென்ன வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

ஒஹிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்களால் பாரிய சுற்றாடல் அழிவுகள் ஏற்பட்டுள்ளதை தாம் அவதானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலைமையை உடனடியாகத் தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(16) நடைபெற்ற பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், மாவட்டத்தின் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது உரிய அளவுகோல்களுக்கு அமைய செயற்படுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் குறித்த முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருந்து காணிகளை சட்டப்பூர்வமாக விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.இது தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி பணிகளை விரைந்து முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.

அடுத்த வருடம் முதல் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் எனவும், மலையக அபிவிருத்தித் திட்டம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் வெளிநாட்டு உதவியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் இருந்து பெறப்பட்ட நிதி என்ற அனைத்து நிதியையும் இணைத்து மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் குறித்த பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here