வொல்பெக்கியா திட்டத்தை மேலும் விஸ்தரிக்குமாறு பரிந்துரை

165

கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக காணப்படும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்த அவர், அரச நிறுவனங்களில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய அரச நிறுவனங்களுக்கு பொறுப்புகள் வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடன் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இங்கு மதிப்பாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக மேல்மாகாணத்தில் டெங்கு பரவல் அதிகரித்துக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி, கடந்த காலங்களில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

முப்படை மற்றும் பொலிசாரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் காரணமாக டெங்கு பரவல் கணிசமான அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தத் திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்துவதன் மூலம் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இந்த சந்திப்பில் கலந்து கொண்டதுடன், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், மத ஸ்தலங்கள், பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவித்து பெற்றோர்களின் பங்களிப்புடன் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்து புகைப்படங்களுடன் அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறும் சாகல ரத்னாயக்க பணிப்புரை விடுத்தார்.

2024 ஜனவரி முதல் வாரத்தில் இந்தத் திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யவும் யோசனை முன்வைத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here