18 சதம் மின்கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காலி கல்வடுகொடவைச் சேர்ந்த விசும் மாபலகம தெரிவிக்கிறார்.
காலி நகரத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கும் மின்சாரத்தை வழங்குகின்ற (Lanka) Electricity Private Company Limited (LECO) நிறுவனத்தினால் மாபலகமவின் வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
6650.18 ரூபாவாக இருந்த மின்கட்டணத்தை செலுத்துவதற்காக Leco அலுவலகத்திற்குச் சென்றபோது, 18 சதம் தொகையை செலுத்த வேண்டுமா என்று காசாளரிடம் தாம் கேட்டதாகவும் அதற்கு அவ்வளவு சிறிய தொகைக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தாம் 19-12-2023 அன்று ரூ.6650.00 செலுத்தி மீதமுள்ள ரூ.0.18 செலுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், LECO நிறுவனத்தால் வீட்டு மின்சாரத்தை துண்டித்துள்ளதாக மாபலகம தெரிவித்திருந்தார்.
அவர் பல மணி நேரம் கழித்து வீட்டிற்கு சென்றதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கான அறிவித்தல் வீட்டின் முன் வைக்கப்பட்டு, கூடுதல் கட்டணமாக 1,231.00 ரூபாவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நிலுவையில் உள்ள 0.18 ரூபாவையும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில், இலங்கை மின்சார தனியார் கம்பனியின் காலி கிளையிடம் வினவியபோது, அங்கு கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதால், கட்டணம் அறவிடாமல் மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.