follow the truth

follow the truth

August, 30, 2025
Homeஉள்நாடுயாழில் இசை நிகழ்ச்சி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன்

யாழில் இசை நிகழ்ச்சி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன்

Published on

சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால், வர மாட்டார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாசார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

#முற்றவெளி_சம்பவம். கொஞ்சம் சிந்தித்து விட்டு, கொஞ்சம் சிரித்தும் விட்டு, இதுவும் கடந்து போகும் என்று கடந்து போகலாம்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது.
ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு Airport போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம். அந்த வெடிப்பில் எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள்.

பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அன்று அதற்கு எதிரான ஒரு சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர், குண்டு பின்னணியில் இருந்ததாக அன்று சொல்லப்பட்டது. சமீபத்தில், சென்னையில் ரகுமானின் இசை நிகழ்வும் குழப்பத்தில் முடிந்தது.
ஒவ்வொன்றும் வெவ்வேறு பின்னணி. ஆனால், சம்பவங்கள் இசை கலை நிகழ்வு சம்பவங்களே.

இந்த முற்றவெளி நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், இலவச நிகழ்வையும், கட்டண நிகழ்வையும், ஒரே திறந்த வெளியில், சிறு மெல்லிய தடுப்புகளை வைத்து, நடத்த போய் மாட்டிக்கொண்டார்கள். இது நல்ல அனுபவம்.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். அவ்வளவுதான்.

இலங்கை வந்து செல்வது என்பது பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. என்ன.., பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, “காவாலியா”, “ஆவாலியா” என்று ஆடி, பாடி, சிரித்து, கொஞ்சம் பணமும் பண்ணி விட்டு, ஓடி விடலாம். அவ்வளவுதான்.

சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம்.

முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்கள், நிகழ்ச்சியில் கொள்கை அடிப்படைகளில் கலந்துக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, அவர்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.
“அப்போதே சொன்னோம், சொல்லவில்லை”, என்று யாரும் தப்ப முடியாது. எப்போதுமே சம்பவம் நிகழ்ந்த பிறகுதான் தீர்வு தேட வேண்டும் என்றில்லை. முன்கூட்டியே ஊகித்து விதி முறைகளை அறிவிக்கலாம்.

இளம்பசங்கள், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான பசங்கள் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள்.

முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது ஏறிய பசங்களை கண்டுதான் நான் பயந்து போனேன். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கலாம். அதாவது உயிர் சேதம்.

முதலில் கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இப்படி ஆயிரக்கணக்கில் கூடுவதற்கு உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி. சுற்றி மூடப்பட்டு, பாதுகாப்புடன் கூடலாம்.
யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம்.

இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை.
அடுத்த முக்கிய விஷயம், “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது.

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம். அவ்வளவுதான்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...