நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும்

371

நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்ளடக்கி, தொழிலுக்கு ஏற்றவகையிலான மாணவர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும், புதிய தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14) பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்று வருகின்றது. அதன்படி, பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதற்காக 14 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும். உலகிற்கு பொருத்தமான தொழில் படையினை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி முறையை உலகிற்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் உலகிற்கு தேவையான தொழில் படையினை உருவாக்க முடியும்.

அதனூடாக சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்சைகளின் சுமைகளை குறைத்து ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்வாங்கி தொழில் முறைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம்.

நாம் எவரும் 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதை விரும்பவில்லை. எரிவாயு, எரிபொருள் உணவு வரிசைகள் அற்ற சமூகமே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே அவ்வாறான யுகத்திற்குள் மீண்டும் நாடு செல்லாமலிருக்க வலுவான பொருளாதாரத்தை நாம் உருவாக்குவோம். வலுவான பொருளாதாரம் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here