சாரணர் இயக்கத்திற்கு தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு

325

அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை இன்று (21) ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இனம், மதம் என்ற அடிப்படையில் எவரும் சாரணர் ஜம்போரியின் இணைந்துகொள்வதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அனைத்து தருணங்களிலும் இலங்கையர்களாக ஒன்றுபடும் பட்சத்தில் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமென வலியுறுத்தினார்.

நாட்டுக்குத் தேவையான நல்ல பிரஜைகளை உருவாக்கும் சாரணர் அமைப்பை விரிவுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதற்காக சாரணர் இயக்கம் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் தருவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

இலங்கை சாரணர இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

சாரணர் இயக்கத்தினால் நாட்டுக்கு நல்ல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். பிரதம சாரணராக பொறுப்பேற்றுக்கொண்ட போது சாரணர் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிக்க முடியுமா என்று வினவினேன். அதனை செய்ய முடியுமென சாரணர் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதன்படி அனைவரும் ஒன்றுபட்டு சாரணர் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கையை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான போதிய வளம் இல்லாத பிரச்சினை காணப்பட்டது. சாரணர் இயக்கத்தில் 2 இலட்சம் பேர் இணைக்கப்பட்டவுடன் இதற்காக வழங்கப்படும் நிதித் தொகையை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அதற்கான திட்டமிடலொன்று அவசியம்.

அதேபோன்று, இதுபோன்ற அமைப்புகள் மூலம் புதிய அறிவையும் புதிய தொழில்நுட்பத்தையும் வழங்க முடியும். மேலும், அடுத்த ஆண்டு தேசிய சாரணர் ஜம்போரியின் போது செயற்கை நுண்ணறிவை வழங்க முடியும். இந்த சாரணர் இயக்கத்தை நாம் புதிய அறிவை வழங்கும் ஒரு வழியாக பயன்படுத்தலாம். எனவே, சாரணர் இயக்கத்திற்கு தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்க எதிர்பார்க்கிறேன்.

சாரணர்கள் மட்டுமின்றி அனைவரும் நாட்டுக்காக தமது பொறுப்பை செய்ய வேண்டும். நம் அனைவரும் அதனை நிறைவேற்றுகிறோமா என்ற கேள்வி எம்முன் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் நிறைவேற்றுவார்களா என்பதுதான் பிரச்சினை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அனைவரும் கஷ்டங்களை எதிர்கொண்டோம். நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்தோம். நம் நாடு வங்குரோத்தடைந்தது. ஆனால் தற்போது அந்த வங்குரோத்து நிலையில் இருந்து படிப்படியாக வெளியேறி வரமுடிந்துள்ளது. மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கினாலும் இன்னும் கஷ்டமான நிலைமை இருக்கிறது. ஆனால் நாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டுமானால் நாம் இந்தப் பாதையில் தொடர வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட பிறகு, அடுத்த தலைமுறைக்கு இதனை விட சிறந்த நாட்டை உருவாக்குவது தான் நம் அனைவரினதும் கடமை. இந்த நிலை மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். அரசியல்வாதிகள் அதற்கு இன்னும் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி நம்முன் இருக்கிறது.

அதனால் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இன்னும் 10-15 வருடங்களில் சிறந்த நாட்டை உருவாக்க முடியும். இந்த நாட்டின் வருங்கால சந்ததியினருக்கான நமது கடமையாக நான் அதனைக் குறிப்பிடுவேன். தேசிய சாரணர் ஜம்போரிக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here