வெளிநாடு சென்ற வைத்தியர்களை அழைத்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

493

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வௌிநாடு சென்றுள்ள வைத்தியர்கள் இருவரை அழைத்து வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) நடைபெற்றது.

மொஹம்மட் ஹம்தி ஃபலீம் என்ற மூன்று வயதான சிறுவன், சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது பழுதடைந்த சிறுநீரகம் இணைக்கப்பட்டு ஆரோக்கியமான சிறுநீரகம் அகற்றப்பட்டதால் உயிரிழந்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சிறுவனின் மரணம் இயற்கையான மரணம் அல்ல எனவும் ஆரோக்கியமான சிறுநீரகத்தை வைத்தியர்கள் அகற்றியதால், இந்த மரணம் நிகழ்ந்ததாகவும், இதனை கொலையாக விளங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரோக்கியமான சிறுநீரகம் விற்கப்பட்டதா என பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயமான சந்தேகம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

வைத்தியசாலையில் பணியாற்றிய இரு வைத்தியர்கள் சத்திரசிகிச்சையின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், பொரளை பொலிஸார் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், விசாரணைகளை ஆரம்பித்து தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு பொரளை பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here