“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

474

ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், குறித்த முன்மொழிவை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளதாகக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அரசியல் பேதமின்றி நாட்டிற்கான பொதுவான வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள திறந்த அழைப்பையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் ஏனைய அரசியல் கட்சிகளின் அனைத்து சாதகமான முன்மொழிவுகளையும் உள்ளடக்குவதற்கு தயங்கமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஏனைய அரசியல் கட்சிகளும் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி நல்ல பதிலை வழங்கினார்.

தேர்தலை நடத்துவது தொடர்பிலான கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here