விவசாய ஏற்றுமதி பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதே நோக்கம்

349

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் வருடாந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தனித்தனியாகச் செயற்படுவதால், எதிர்பார்த்த முடிவுகள் தாமதமடைவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதபதி,இந்தத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வதற்காக அரச மற்றும் தனியார் விவசாச ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய கீழ் மட்டத்தில் அமுல்படுத்தக்கூடிய வகையில் இந்த தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதனுடன் தொடர்புள்ள 26 திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர விவசாய தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கிய கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் எனவும் விவசாய ஏற்றுமதி பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க, ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இத்திட்டத்தின் அமுலாக்கமானது விவசாயத்தை வர்த்தக மட்டத்திற்கு கொண்டுவருதல், விவசாய உயிர்ப்பல்வகையைப் பாதுகாப்பது தொடர்பில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை ஊக்குவித்தல் என்பவற்றுக்காக அந்தக் காணிகளின் உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் வரம்புகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

அத்துடன், 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க, விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் திட்ட முன்மொழிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here