தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

191

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரிடம் கோஷங்கள் இல்லாததால், அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன, தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் பலம் ஜனாதிபதி தலைமையிலான அணிக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின்படி ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன்பின்னர் அரசியலமைப்பின்படி பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை ஒத்திவைப்பதற்காக தேர்தல் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. கோஷங்கள் இல்லாததால் தான் தேர்தலை நடத்துவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாட்டின் வங்குரோத்து நிலை நீக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இப்போது கோஷங்கள் இல்லாமல் போய்விட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இம்முறை புத்தாண்டை கொண்டாடும் சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார். அவர் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பியுள்ளார். அவர் அனைத்து மக்களின் நன்றிக்கு தகுதியானவர்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here