follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் - எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

Published on

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி, 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய உமிழ்வை அடையும் பசுமைப் பொருளாதாரமாக மாற்றியமைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பமானது எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தைத் தணிக்க உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (07) ஆரம்பமான இலங்கை காலநிலை மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையிலும் காலநிலை மாற்றம் தொடர்பான மையம் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான சட்டங்களை வகுப்பதில் உலக நிதி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் காலநிலை மாற்றச் சட்டத்தை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இந்து சமுத்திரம் மற்றும் வெப்பமண்டலப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வகிபாகம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் இலங்கையின் தலையீடு ஆகியவற்றை விளக்கிய ஜனாதிபதி, இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் விளக்கினார்.

இதுவரை சுற்றுச்சூழலில் மட்டுமே எங்கள் கவனம் இருந்தது. ஆனால் அதில் காலநிலை மாற்றம் வகிக்கும் முக்கிய பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் மோசமானால் முழு சுற்றுச்சூழலும் சீர்குலைந்துவிடும். எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான வெப்பம் எதிர்கால காலநிலை மாற்றத்தின் அறிகுறியாகும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே ஜனாதிபதியாக எனது பணியாக இருந்தது. இதுவரை இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் அடுத்தகட்ட பணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார முறைமையில் எம்மால் முன்னேற முடியாது. நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல், நாம் அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான புதிய சட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம். மேலும் பொருளாதார மாற்ற சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கிறோம்.

2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை இலங்கை அடைவதையும் இந்த பொருளாதார மாற்றச் சட்டம் உறுதி செய்கிறது. மேலும் அந்த காலப்பகுதிக்கு முன்னர் இலங்கை இந்த இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான இலங்கையின் கொள்ளளவு 30 – 50 ஜிகாவோட் வரையில் காணப்படுகிறது. எங்களிடம் உள்ள இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை பயன்படுத்தி பெரும் பயனை அடைய எதிர்பார்த்திருக்கிறோம்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவது தொடர்பில் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்குத் தேவையான சட்டங்களையும் இலங்கை கொண்டு வரும். கொத்மலை பகுதியிலிருந்து சுமார் 600 ஏக்கரை ஏற்கனவே ஒதுக்கியிருப்பதோடு, அடுத்த வருடம் கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிக்க உள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...