இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை என்பதை தானும் ஏற்றுக்கொள்கின்றேன் எனவும், ஆனால் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது இன, மத பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைவதேயாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய ஊடகவியலாளர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த விஜயத்தின் போது சந்திப்பில் கலந்து கொண்டார்.
அங்கு உதயன் பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் இ. சரவணபவன், தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் ஏனைய ஊழியர்கள் ஜனாதிபதியை மரியாதையுடன் வரவேற்றனர்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கினார்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதே நாட்டின் பிரதான பிரச்சினை என சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜூன் மாதம் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்ததால் தற்போது ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தாம் சந்தித்த இளைஞர்களின் முதன்மையான கோரிக்கைகள் வேலை வாய்ப்பு மற்றும் எதிர்கால ஸ்திரத்தன்மை என்பனவாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு மற்றும் தெற்கு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மாகாண சபைகளை பலப்படுத்துவதன் மூலம் அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்திக்கான பரந்த இடத்தை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த மாகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.