முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கைகள் இரண்டினையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு வார காலத்தினுள் வெளியிடாவிட்டால் அதனை தாம் வெளியிடத் தயார் என பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில அவர்கள் சவால் விடுத்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து உரையாற்றுகையில், அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் கூறியது போல, குறித்த அறிக்கைகளில் எவ்வித குறையும் இல்லை என்றும், அறிக்கையானது முழுமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஜனாதிபதி கட்டுவாப்பிடிய கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வெறும் கையோடு சென்றிருந்தார். அவர் செல்லும் போது குறித்தஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை கொண்டு சென்றிருக்கலாம் என நான் அண்மையை ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தேன். இன்னும் அதனை மறைக்காமல் உடனே குறித்த அறிக்கைகளை பிரசித்தமாக வெளியிடக் கோருகிறோம்.
இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இடம் கேள்வி கேட்கும் போது, சில அறிக்கைகளில் பக்கங்கள் குறைவு சில இன்னும் முடியவில்லை என்ற சாக்குப் போக்கு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
முழுமையான அறிக்கைகள் எம்மிடம் உண்டு நாம் ஜனாதிபதிக்கு இன்னும் ஒரு வார காலம் தருகிறோம், அதற்குள் வெளியிடாவிட்டால் அதனை இன்னும் சில நாட்களில் நாம் வெளியிடுவோம்..” எனத் தெரிவித்திருந்தார்.