பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9 ) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும் என்றும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும், மேலும் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த சிறுமி சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறையை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிசுடன் இணைந்து மிக விரைவில் உருவாக்குவது குறித்து தான் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜுடன் கலந்துரையாடியதாகவும் பிரதமர் கூறினார்.
இது தொடர்பில் குறித்த பிள்ளையின் பெற்றோருக்கு அனைவரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் விரிவான தலையீட்டை வழங்கும் என்றும், பிள்ளைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கான திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.