ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய வாகன தளத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ரணவிரு சேவை அதிகாரசபையிடம் கையளித்தார். இலங்கை இராணுவத் தலைமையகத்தின் ரணவிரு சேவை அதிகாரசபையின் சார்பாக மேஜர் எரங்க ரத்நாயக்க இது தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த வாகனங்கள் அனுராதபுரம், கம்புறுபிட்டிய மற்றும் பாங்கொல்ல ஆகிய இடங்களில் உள்ள அபிமங்சல நிலையங்களிலும், அத்திடிய மிஹிந்து செத்மெதுர மற்றும் ராகம ரணவிரு செவன ஆகிய பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் படைவீரர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.
இரண்டு மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வண்டிகள், ஒரு நிசான் பெற்றோல் ஜீப் வண்டி, ஒரு டொயோட்டா கரீனா கார் மற்றும் ஒரு டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் என்பன இவ்வாறு பராமரிப்பு நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.