பாதுக்கை, போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் நேற்று(19) இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.
போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், ஒரு நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க துடிப்பு மிக்க பிரஜைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மாணவர் பாராளுமன்றம் போன்ற திட்டங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பிரதமர் பதில் வழங்கினார்.
தற்போதைய கல்வி முறையை மாற்றுவதற்காக அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிரான கொள்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன அவர்கள் இங்கு பாராளுமன்ற மரபுகள், செயற்பாடுகள் மற்றும் அதன் வகிபாகம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.