போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம், அந்த பெண்ணை சிறைச்சாலை விதிமுறைகளின் படி நடத்துவதாகவும் அவருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த சார்லட்டே மே லீ கடந்த வாரம் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் குஷ் எனப்படும் போதைப்பொருளை கடத்தியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் தனக்கு போதைப்பொருள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
என்னை திட்டமிட்டு இதில் மாட்டிவிட்டுள்ளனர், இலங்கைக்கு பயணிப்பதற்கு முன்னர் தாய்லாந்து தலைநகரில் உள்ள ஹோட்டலில் எனது பொதிகளை விட்டுவிட்டு வெளியே சென்றேன், என அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் குற்றவாளி என்பது உறுதியானால், 20 முதல் 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த பெண்ணிற்கு சிறைச்சாலை விதிமுறைகளிற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் பிரிட்டனின் டெய்லிமெய்லிக்கு கருத்து தெரிவித்துள்ள லீ இலங்கைக்கு புறப்பட்டவேளை எனது பயணப்பொதிகளில் போதைப்பொருள் இருப்பது எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பின்னர் இலங்கையில் ஏழு நாட்கள் அவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
மூட்டை பூச்சிகள் உள்ள சோபாவில் என்னை உறங்கச்சொன்னார்கள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 24 மணிநேரம் என்னை கண்காணித்துக்கொண்டிருந்தார்கள் என அவர் டெய்லிமெய்லிக்கு தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை என்னை நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தார்கள்,14 நாள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.
22 மணிநேரம் என்னை சிறைக்கூண்டிற்குள் அடைத்துவைத்துள்ளனர்,உணவு உண்பதற்கும் வெளியில் காலைநீட்டுவதற்கும் மாத்திரம் அனுமதிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை உணவுகள் என்னை நோயாளியாக்கின்றன இதனால் நான் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை,நான் என்னால் முடிந்தளவு சாதகமான மனோநிலையுடன் இருக்க முயல்கின்றேன் என்னால் அதனை மாத்திரம் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இங்கு கடினமாக உள்ளது, இங்கு மனித உரிமை இல்லை,கட்டில்கள் இல்லை போர்வைகள் இல்லை,நீண்ட தாழ்வாரத்தில் ஏனைய பெண்களுடன் சேர்ந்து உறங்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மின்விசிறி உள்ளது அது இயங்கவில்லை, தொலைக்காட்சி உள்ளது அதுவும் இயங்கும் நிலையில் இல்லை, என்னிடம் ஒரு ஜோடி ஆடைகள்தான் உள்ளன மாற்றுடை இல்லை,எனது உடல்நல பாதிப்பிற்கு மருந்து எடுக்க அனுமதிக்கின்றார்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தூக்க மாத்திரைகளை மாத்திரம் தருகின்றார்கள்,ஷவரில் தண்ணீர் வராது ஒரு வாளியை தந்து குளிக்க சொல்கின்றார்கள்,ஒரு நீண்ட தாழ்வாரத்தில் ஏனைய பெண்களுடன் விட்டுவிடுகின்றனர் அவ்வளவுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
சூரியனை பார்ப்பதற்கு இரண்டு மூன்று மணிநேரம்தான் அனுமதிப்பார்கள்,உணவு உறைப்பாக உள்ளதால் நான் உண்ணவில்லை,நான் எனது சட்டத்தரணிகளிடம் எனக்கு வேறு உணவு தேவை என தெரிவித்துள்ளேன்,அவர்கள் அதற்கு தீர்வை காண்பதாக தெரிவித்தார்கள் ஆனால் இன்னமும் தீர்வை காணவில்லை என லீ தெரிவித்துள்ளார்.
அதிஸ்டவசமாக சில பெண்கள் சில பெண்கள் ஆங்கிலம் கதைப்பார்கள், அவர்கள் சில பிஸ்கட்களை தந்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.