புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இவர் புத்த மதத்தின் 14ஆவது தலாய் லாமாவாக கருதப்படுகிறார். பொதுவாக ஒரு தலாய் லாமா மறைவின் பொது அடுத்த தலாய் லாமா தேர்வு செய்யப்படுவார்கள். 600 ஆண்டுகளாக இதே நடைமுறை தான் தொடர்கிறது.
ஆனால், இந்த முறை தலாய் லாமா தேர்வு செய்யும் விவகாரத்தில் சீனா தலையிடலாம் எனச் சொல்லப்பட்டது. புதிய தலாய் லாமா தேர்வு குறித்து சீனா கூறிய கருத்துகளே இதற்குக் காரணமாகும். இந்தச் சூழலில் தான் தலாய் லாமா இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தனது மறைவுக்குப் பிறகும் 600 ஆண்டு பழமையான இந்த அமைப்பு தொடரும் என்றும், தனது அடுத்த மறுபிறப்பை அதுவே தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியுள்ளார். 15வது தலாய் லாமாவை நியமிக்கும் அதிகாரம் சீனாவுக்குப் போகாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு கடென் போட்ராங்கிற்கு மட்டுமே இருக்கிறது.. வேறு யாருக்கும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.