தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து. ஜூன் 21 முதலே டோகரா தீவுகளைச் சுற்றிய கடற்பகுதிகளில் நிலநடுக்க செயல்பாடுகள் “மிகவும் தீவிரமாக” இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை, சுனாமி எச்சரிக்கைகள் விடப்படவில்லை, ஆனால் தேவைப்பட்டால் வெளியேற தயாராக இருக்கும்படி மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பல கண்டத்தகடுகள் சந்திக்கக்கூடிய இடத்தில் அமைந்திருப்பதால், ஜப்பான் உலகில் அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு ஓர் ஆண்டில் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன.
நிலநடுக்கங்கள் காரணமாக டோகரா தீவுகளில் சில விருந்தினர் இல்லங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இடமளிப்பதை நிறுத்தியுள்ளதாக தோஷிமா கிராமம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இவை உள்ளூர் மக்களுக்கு தங்குமிடமாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.