இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.
இன்று(14) வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றமை தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது.
சவூதி அபிவிருத்தி நிதியம், இலங்கை குடியரசில் சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட 15 முக்கிய திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளது.
இந்த வயம்ப பல்கலைக்கழக திட்டமும் சவூதியின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.
பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கான அடித்தளமாகவும், மக்களுக்கு இடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.