சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு சக்தியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கை வகுத்துள்ள இலங்கை தபால் துறையின் பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம், ஜூலை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
அதன்படி, பொலன்னறுவை தபால் தலைமையfத்தின் புதிய கட்டடத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து வைக்க உள்ளார்.
“பிபிதெமு பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் பொலன்னறுவை தபாலக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள், புதிதாக கட்டப்பட்ட தபால் நிலையக் கட்டடத்திற்குப் பின்னால் அமைந்துள்ள நிர்வாக வளாகம் மட்டுமே நிறைவடைந்திருந்தது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில், முன்புறத்தில் இருந்த பழைய பாழடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு, இந்தக் கட்டடம் புதிய பொலன்னறுவை தபால் நிலையத்திற்காக கட்டடத் திணைக்களத்தினால் ரூ. 69 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பிராந்தியத்தில் உள்ள அஞ்சல் சேவையானது, 12 தபால் நிலையங்களையும் 91 துணை தபால் நிலையங்களையும் கொண்டுள்ளது.