நாட்டில் ஆண் மக்கள்தொகை தொடர்ந்து குறைவதால், எதிர்காலத்தில் பல்வேறு நெருக்கடிகள் உருவாகக்கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் எச்சரித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அந்த விகிதம் 100 பெண்களுக்கு 93.7 ஆண்கள் எனக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றத்துக்கு, பெண்களின் ஆயுட்காலம் அதிகரித்தது, பெண்களின் பிறப்பு வீதம் உயர்ந்தது மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன என அவர் விளக்கியார்.
மேலும், “பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற சில துறைகளைத் தவிர, மற்ற அனைத்து கல்வித் துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புகளிலும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஆண்கள் குறைவாக இருப்பது பாலின சமநிலையின்மையை ஏற்படுத்தும். இது சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஆண்களுக்கு தேவைப்படும் சில தொழில்களில் ஆண்கள் இல்லாததால் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அது உற்பத்தித் திறனைப் பெரிதும் பாதிக்கக்கூடும்” என்றார் பேராசிரியர் மெத்சில்.
இத்தகைய நிலைமைக்கு அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.