கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டார்.
மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கபட்ட சிறப்புத் திட்டத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அரசாங்க மருத்துவமனை கட்டமைப்பை வினைத்திறனுடன் பராமரிப்பதே முதன்மை நோக்கமாகும் என தெரிவித்த அமைச்சர், ஆய்வு விஜயத்தைத் தொடர்ந்து, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தலைவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
04 அடிப்படை மருத்துவமனைகள், 18 பிராந்திய மருத்துவமனைகள், 14 சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் 17 ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம், சுகாதார சேவைகளை செயல்படுத்துவதில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் மூத்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் அலுவலக தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் மாவட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளின் பற்றாக்குறையால் சிகிச்சை பெறுவதில் நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து திரு. முரளீஸ்வரன் நீண்ட விளக்கவுரையை வழங்கினார்.
பௌதீக வளங்கள், செயல்திறன், மேம்பாட்டுத் திட்டங்கள், மாவட்டத்தில் நடத்தப்படும் சுகாதார மருத்துவமனைகள் மற்றும் பொது விழிப்புணர்வுத் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவான விளக்கவுரையை வழங்கினார்.
மாவட்டத்தில் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளையை நிறுவுதல், மருத்துவமனைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்துதல், போக்குவரத்து, மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கிய தேவைகளும் இங்கு எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டு போலவே, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்தி, எந்தவொரு சிரமமும் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்க தேவையான திட்டங்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சுகாதார சேவை முறையை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவைப் பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அதிகாரிகள் சங்கம் அமைச்சருக்கு நினைவுப் பரிசை வழங்கியது.