கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களுக்கு உயர்த்தப்படும் என்றும், 08 பாடங்கள் கொண்ட தற்போதைய பாடத்திட்டம் 07 பாடங்களுக்கு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இம்மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டிலிருந்து அமுலில் வரும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த புதிய கல்வி அமைப்பு தொடர்பாக சமூகவலைத்தளங்களில் மற்றும் கல்வியாளர்களிடையே வாத-பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நேற்று(26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலை நேர மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
பாடசாலை நேரத்தை மாற்றும் தீர்மானத்திற்கு தமது கடுமையான எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தியதோடு, இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி தரத்தை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.