follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஇலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியா

இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியா

Published on

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் வெளிநாட்டு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்

இரு அமைச்சர்களுக்குமிடையிலான சந்திப்பும், அதனைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் பெப்ரவரி 07ஆம் திகதி புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து மூலோபாய பங்காளித்துவமாக பரிணமித்துள்ளமையை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு, வலு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு, இணைப்பு, மக்களுக்கிடையிலான தொடர்பு போன்றவை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கி பண்ணை ஒப்பந்தம் குறித்தும் விசேட கவனம் செலுத்திய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பை எடுத்துக் காட்டுவதாகவும், அதனால் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையில் கணிசமான நன்மைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய இக்கலந்துரையாடலில், மருந்துகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி அமைச்சர் பீரிஸ் இந்திய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, மீன்பிடி சார்ந்த பிரச்சினை குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடினார். இதனை ஒரு முக்கியப் புள்ளியாகக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர், ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டு மீண்டும் மீண்டும் எழும் பிரச்சினையாக இது மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அனைத்து இருதரப்புப் பொறிமுறைகளையும் ஒன்றுகூட்ட வேண்டிய அவசரத் தேவை குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் என இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் பீரிஸ் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பெப்ரவரி 08ஆந் திகதி இடம்பெற்றது. இரு நாடுகளினதும் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரும் கலந்துரையாடினர். இதன்போது, இருதரப்பு உறவின் நிலை மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால ஒத்துழைப்பிற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...