உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, அரசாணைச் சட்டத்தில் தற்போதுள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், முதல் நியமனப் பத்திரத்தின்படி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்குக் குறையாமலும் இரண்டாவது நியமனப் பத்திரத்தின்படி தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25 வீதத்திற்கு குறையாத இளைஞர் பிரதிநிதிகளையும் நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.