எஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் அது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விரிவான விசாரணையை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் தீர்மானித்தது.
அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில் இந்த விசேட குழு முதல் தடவையாக கூடியதுடன், குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் அது தொடர்பில் வழக்குத் தாக்கல்செய்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா, அது தொடர்பில் அரச பொறிமுறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகக் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரண இங்கு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கும், அவ்வாறான அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
குழுவின் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் அது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசேட குழுவை எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.