சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஏதாவது ஒரு வகையில் செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆலோசனை வழங்கினார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்பான அரசாங்கக் கொள்கையுடன் பொருந்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டரீதியான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பில் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு முன்னர் திகதிகளுடன் கூடிய அறிக்கையை கோபா குழுவுக்கு வழங்குமாறும் லசந்த அழகியவண்ண பரிந்துரை வழங்கினார்.
மூன்றரை வருடங்களாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டில்லை என்றும் சிவில் பாதுகாப்புப் படை தேய்வடையும் படையாக இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவத்தனர்.
அத்துடன், தற்பொழுது 33,687 பேர் சிவில் பாதுகாப்புப் படையில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அதன் விபரங்களையும் குறிப்பிட்டனர்.
அத்துடன், இந்தப் படையை ஸ்தாபித்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இதன்போது தெளிவுபடுத்தினார்.
அதற்கு மேலதிகமாக, தேவைக்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்வனவுகள், இந்தத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் இந்தப் படையினால் பயிரிடப்பட்ட தானியங்கள், விளைச்சல்களை விற்பனை செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.