மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுவதும், வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் நாடு திரும்புவதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புதிய வைத்தியர்கள் சுகாதார அமைச்சுடன் இணைந்து சேவையாற்ற மறுப்புப்பதும், பட்டபின் படிப்பு கற்கைகளை மோற்கொள்ளாமை போன்ற காரணங்களால் விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் தவறினால் தரமான சுகாதார சேவையை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனவே, மருத்துவர்கள் பணிபுரிவதற்கு ஏற்ற மனநிறைவை ஏற்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும், இந்த மூளைசாலிகள் வெளியேற்றம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே அரசுக்கு தகவல் தெரிவித்தும் அரசாங்கம் உரிய தீர்வு காணவில்லை என்றும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இந்த விடயங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் கவனம் செலுத்தியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாற்று முறைகளின் ஊடாக உயர்தர வைத்தியர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும்,இலவசக் கல்வி எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்படக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.