சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனவே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக நேற்று காலை காவல்துறை அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதன்பின்னர் குறித்த வீட்டுக்குள் சென்று சோதனையிட்ட காவல்துறையினர், வீட்டின் கீழ்த் தளத்தில் உள்ள ஒரு அறையிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதனையடுத்து, எரியுண்ட நிலையிலிருந்த ஆண் ஒருவரின் சடலத்தையும் சிறுமியொருவரின் சடலத்தையும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் அவர்களுடைய 15 வயதுடைய மகள் எனத் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரெனவும், அவரது கணவர் காணி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டிலிருந்து சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் காவல்நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வீட்டுக்குள் எவரும் நுழையாத நிலையில் தங்க ஆபரணங்கள் காணாமல் போனமை இதுவரையிலும் மர்மமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பல கோணங்களின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்தவர்களுக்கு இடையில் நேற்று அதிகாலை வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்த வர்த்தகர் மதுபோதையிலிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.