ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மே 04 முதல் மே 06 வரையில் வியட்நாம் சோசலிச குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இப்பயணத்தின் போது, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி திசாநாயக்க உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோ ச்சி மின் நகரில் நடைபெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வப் பயணத்தின் போது இரு தரப்பினரும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை இறுதிசெய்வார்களென எதிர்பார்க்கப்படுவதுடன் வணிக சமூகத்துடனான ஈடுபாடும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 வருடங்கள் பூர்த்தியாகின்றமையானது, வியட்நாம் சோசலிச குடியரசுக்கான ஜனாதிபதியின் இப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.