ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று(16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கு அமைவான வரைவின் கீழ் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பொது மக்களுக்கு அதிகளவான பிரதிபலன்களை பெற்றுத்தரும் பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்புக்கான தீர்வுகளை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை, GovPay அரச கொடுப்பனவு கட்டமைப்பு, டிஜிட்டல் தொலைக்காட்சி வேலைத்திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார இலக்குகள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினதும் இலங்கை தகவல் பாதுகாப்பு அதிகாரசபையினதும் பணிகளை விஸ்தரிப்பது தொடர்பிலும், புதிய சட்டங்கள் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பிலான நிறுவனங்களை அமைப்பது தொடர்பிலான முன்மொழிவுகளும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டன.