ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைச் சபையின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த நட்டத்துக்கு பல காரணங்கள் இருப்பதாகவும், சில நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தாலும், உரிய கொடுப்பனவுகள் மோற்கொண்டில்லை என்பதும், சில நோயாளிகளிடமிருந்து அறவிட வேண்டிய கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமையும் புலப்படுவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், விசேட சேவைகள் வழங்கப்பட்டாலும், அவற்றிலிருந்து வைத்தியசாலைக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
அந்த விசேட சேவைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளன என்றும், அந்த விசேட சேவைகளுக்காக 2023 ஆம் ஆண்டில் முழு ஊழியர்களுக்கும் செலுத்தப்பட்ட தொழில்முறை கட்டணம் சுமார் 600 மில்லியன் ரூபாய் என்றும் இதன்போது குழு மேலும் சுட்டிக்காட்டியது.
மதகுருமார்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் முறைமை நடைமுறையில் உள்ளதாக கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஊழியர்களுக்கும் 4,000 ரூபாய் எல்லையின் கீழ் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய, இந்த முறையற்ற சூழ்நிலையை தவிர்ப்பதற்குத் தேவையான முறைமையை விரைவாகத் தயாரிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது.