எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படின், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்படக்கூடும் என சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்துள்ளார்.
“இதுவரை எரிபொருளை தொகை களஞ்சியசாலைகளிலிருந்து நாட்டின் பல பாகங்களுக்கு எடுத்து சென்றது எங்கள் பவுசர் உரிமையாளர்களே. ஆனால் தற்போது, எரிபொருள் போக்குவரத்தை சில நெருங்கிய வியாபாரிகளிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெற்று வருகிறது,”
“நாங்கள் ஒரு சங்கமாக இந்த மாற்றத்தை முந்தைய காலங்களில் தடுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இப்போது மீண்டும் அந்த முயற்சி தொடர்கிறது. கொழும்பு மற்றும் முத்துராஜவெலவிலிருந்து குருநாகல் முனையத்திற்கு எரிபொருள் கொண்டு செல்வதை டெண்டர் மூலம் ஒப்படைக்க திட்டமிடுகின்றனர்.”
சங்கத்தில் தற்போது 400–500 பவுசர் உரிமையாளர்கள் இருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் சிறிய அளவில் – ஒரு அல்லது இரண்டு வாகனங்களுடன் – தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய ஒப்படைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், இது எரிபொருள் விநியோகத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
“எரிபொருள் போக்குவரத்து சேவையை பொதுமக்கள் நலனுக்கேற்ப, வழக்கம் போல், பரந்த அளவிலான பங்குபற்றலுடன் இயங்க அனுமதிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.