இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று(10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை, அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சவால்கள், மற்றும் அவற்றுக்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் தொடர்பான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நோய்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும், மருந்துப் பற்றாக்குறையை தவிர்க்க அரசு நிர்வாகத்தில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்தார்.
இதனையடுத்து, இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக, நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ஆதரவை வழங்க அமெரிக்கா தொடர்ந்து தயாராக உள்ளது என தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.