மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் பற்றிய தகவல் குறித்து, இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு இராஜதந்திர அல்லது பாதுகாப்பு தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற பொலிஸ் ஊடக பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது;
மலேசியாவில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன், அவர்களது விபரங்களை உறுதி செய்யும் பணியில் பல பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் தற்போது மலேசியா மற்றும் தாய்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதுவரை கைது செய்யப்பட்ட 26 பேரில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் உறுதி செய்தார்.
ஜூலை 11ஆம் திகதி மலேசியாவில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தேசிய மத்திய பணியகத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரு சந்தேகநபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் குற்றவியல் ஆவணக் காப்பகம் மற்றும் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதில் 20 வயதுடைய ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அவரை குறித்து மலேசிய குடிவரவு சட்டங்களுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் தற்போதுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் மலேசிய அரசு தீர்மானிக்கும் வழியில் நாடு கடத்தல் அல்லது விசாரணைகள் தொடரும் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.