விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதிகள் வைக்கவேண்டும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் வில்லி வால்ஷ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இடைக்கால அறிக்கையைப் பற்றி அவர் கருத்துரைத்தார்.
“குரல் பதிவுடன் காணொளி பதிவும் இருந்தால் விசாரணைகளில் அது பேருதவியாக இருக்கும்,” என்று சிங்கப்பூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின்போது என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விமானி அறையில் காணொளியைப் பதிவுசெய்யும் நடைமுறையை விமானிகளுக்கான தொழிற்சங்கம் நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றது. விமானிகள் சங்கங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு, அத்தகைய காணொளிப் பதிவுகள் ரகசியமாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பியது.
இருப்பினும், ஏறக்குறைய 350 விமான நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் வால்ஷ், விமான விபத்துகளின் விசாரணை முழுமையாகவும் முறையாகவும் நடத்தப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.