இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மை, ஆடை வடிவமைப்பு மற்றும் பிற துணைத் துறைகளையும் மேம்படுத்த உதவும் என அந்த சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாத்துறையானது ‘திருமண சுற்றுலா’விற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏனையவர்களை ஒரே மேடையின் கீழ் பட்டியலிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருமண சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளுடன் இலங்கை உறவுகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும் அதேவேளையில், ஐரோப்பா, ஆசியா மற்றும் பல சந்தைகளில் திருமண தலமாக இலங்கை ஏற்கனவே பெயர் பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.