ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதோடு, அதன் விளைவாக மக்கள் தமது தேவைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்து ஜனநாயக ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடரில், கடந்த 2022.04.19 ஆம் திகதி ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சகோதரர் கே.டி. சமிந்த லக்ஷான் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆறுதலையும், ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, குறித்த சம்பவத்தின்போது காயமடைந்த ஏனையவர்களும் மிக விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றது.
அத்துடன், அனைத்து விதமான வன்முறைகளையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையானதொரு விசாரணை நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றது.
அனைத்து தரப்பினரும் வன்முறையைத் தவித்து ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக அதிகாரிகள் மக்களது உணர்வுகளை மதித்து அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுத்து உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
நாட்டு மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் விரைவில் நீங்கி ஒரு சுமுகமான நிலை நம்நாட்டில் உருவாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.