எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மக்களின் இணக்கப்பாடின்றி அமைக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நீங்கள் எனக்கு அழைப்புவிடுத்தபோது, அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்று நான் கூறவில்லை என்பதையும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதுகுறித்து முடிவொன்றைக் கூறுவதாகவுமே தெரிவித்தேன் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என கூறியுள்ளார்.
நீங்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்துள்ள மக்களின் நிலைப்பாடும், அவர்களது அபிப்பிராயத்திற்கு முரணான வகையில் குறிப்பிட்ட காலவரையறையின்றி பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு மாற்றுவழிகளைக் கையாள்வது மக்கள் ஆணைக்கு முரணானது என்பதுமே உங்களைப் பதவி விலகுமாறு நான் கோரியதற்கான பிரதான காரணங்களாகும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறெனினும் நான் கடந்த 12 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்கீழ் என்னால் ஸ்தாபிக்கப்படுகின்ற அரசாங்கத்தின் பிரதமராக மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.