ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க மேலும் 695 மில்லியன் ரூபாய் தேவை என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற பொலன்னறுவை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதன் பணிகளை முடிக்குமாறு மாவட்டத்திலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், இதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அரலகங்வில எல்லே குள வீதியின் மேம்பாட்டுப் பணிகள் தொடங்குவது, அடிக்கடி விபத்துக்குள்ளாகும் கொட்டலீய மற்றும் கல்லேல்ல பாலங்களை ஆய்வு செய்வது, பொலன்னறுவை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஹிங்குராக்கொட விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆராய அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் களப்பயணத்தில் ஈடுபட்டதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.