2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தற்போதுள்ள RAMIS (Revenue Administration Management Information System) கட்டமைப்பை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது மற்றும் தேசிய அளவில் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு, RAMIS கட்டமைப்பில் தற்போது உள்ள குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் இதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. செயற்திறன் மிக்க வரி நிர்வாகத்திற்கு டிஜிட்டல் மயமாக்கல் அவசியமானது என இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களான, வரி முறைகேடுகளைக் குறைத்தல், வரி முறையை இலகுபடுத்தல், வரி வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான POS (Point of Sale) இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த நடவடிக்கையின் ஊடாக, நாட்டின் வரி அடிப்படையை விரிவுபடுத்தல், வரி செலுத்தும் செயல்முறையை பொதுமக்களுக்கு மிகவும் இலகுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சொன்றை நிறுவியதன் மூலம் மேற்கொண்ட தலையீட்டின் காரணமாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் நோக்கங்கள் இலகுவாக எட்டப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும் என்பதோடு, இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.