உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
உத்தேச புதிய கல்வி சீர்திருத்த செயற்பாடு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.
கல்வி சீர்திருத்த முன்னெடுப்பை ஆராய்ந்து தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த கல்வி சீர்திருத்தங்களிலிருந்து எதிர்பார்க்கும் இலக்கை அடைய, முழு கட்டமைப்பையும் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
பௌதீக வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
முழுமையான ஆய்வுக்குப் பிறகு, திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், இந்தச் செயல்பாட்டில், கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கும், கல்வி சீர்திருத்த செயல்முறைக்காக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன் முதல் கட்டமாக, இந்த உத்தேச கல்வி சீர்திருத்தத் திட்டம் குறித்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரு விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்தி, அவர்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.