இலங்கையின் மைய அரசியலை தகர்த்தெரிந்த காலி முகத்திடல் போராட்டம்!

1107

கடந்த மே மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான கொழும்பு காலி முகத்திடல் போராட்டம் ஐம்பது நாள் நிறைவைக் கண்டது. இந்தப் போராட்டம் சடுதியாகவே உருவானது. கடந்த ஏப்ரல் மாதம் 09ஆம் திகதியே இந்தப் போராட்டம் ஆரம்பமானது. கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரவு மிரிஹானப் பிரதேசத்தில் ஜனாதிபதியின் பிரத்தியேக வாஸஸ்தலத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டமே காலி முகத்திடல் போராட்டத்துக்கு காரணமாக அமைந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி நிற்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மத்திய வங்கி ஆளுனர், பிரதமர் என்போருக்கு பதவி விலக வேண்டிய நிர்பந்த நிலை உருவானது. அந்த நேரம் இருந்த அமைச்சரவையும் பதவி விலகியது.

இது தற்போதைய பிரச்சினைகளுக்கான அரசியல் ஆர்ப்பாட்டமாகவோ அல்லது அரசியல் போராட்டமாகவோ இருந்தாலும் அது இலங்கை அரசியலை பின் நவீனத்துவத்துக்கு கொண்டு செல்லக்கூடிய ஆரம்ப அடித்தளமாக இருக்கின்றது. பின் நவீனத்துவம் என்கின்ற சிந்தனை இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உருவானது. ரொலன் பாத், ழாக் லான், லியோ தாக், மிகைல் பூகோ போன்ற அறிஞர்கள் இந்த சிந்தனையின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். திட்ட வட்டமான மையக் கருத்துக்களின் மீது இருக்கின்ற அவ நம்பிக்கையும் அதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை முக்கியத்துவம் பெறுதல் என்பதே இதன் பிரதான கோட்பாடாக இருக்கின்றது. இந்த காலி முகத்திடல் போராட்டம் திட்டவட்டமான அரசியல் மையங்களைத் தகரத்தெறிந்து அரசியல் விளிம்பு நிலைகளின் மீது மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் மையங்கள் சிதைந்து அரசியல் விளிம்பு நிலைகள் சமூக மயமாக்கப்படுகின்றதை அவதானிக்கலாம். இதனைப் பின்வருமாறு பல ஆதாரங்களைக் காட்டி விளக்கலாம்.

இலங்கை நாட்டிலே பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. என்றாலும் சுதந்திரத்துக்குப் பின்னர் இரண்டு கட்சிகளே இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைத்தது. தற்போது பொது ஜன பெரமுண அரசாங்கக் கட்சியாக இருந்தாலும் அது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்னுமொரு வடிவமாக இருக்கின்றது. இரண்டின் கொள்கைகள் ஒன்றாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகின்ற போது இந்த இரண்டு கட்சிகளும் இரட்டை சகோதரரர்கள் போல என்று குறிப்பிட்டார். இந்த நாட்டு மக்கள் இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைப்பதற்கான வலுவும் அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கான சக்தியும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாத்திரமே இருப்பதாகக் கருதினர். பின் நவீனத்துவக் கோட்பாட்டுக்கு அமைய இதுவே இலங்கை மக்களின் திட்ட வட்டமான மையக் கருத்தாக இருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியைப் பற்றிய மக்களின் கருத்து இதற்கு மாற்றமாக இருந்தது. இந்தக் கட்சி பிரதான இரண்டு கட்சிகளைப் போல் சமயம், கலாசாரம், இனம் என்பனவற்றுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக உற்பத்திப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த கட்சியாக இருக்கின்றது. பிரதான கட்சிகளின் வடிவத்திலிருந்து இது மாறுபட்டதாக இருக்கின்றது. முற்போக்கு சோசிலிச முன்னணியின் பயணமும் மக்கள் விடுதலை முன்னணியை ஒத்ததாகவே இருக்கின்றது. இவை மக்களின் வரவேற்பை பெற்ற கட்சியாக இருந்தாலும் மக்களின் ஆதரவை அந்தளவு பெற்ற கட்சியாக இருக்கவில்லை. எனவே இவை அரசியலில் விளிம்பு நிலையில் இருந்தது. தற்போது உருவாகி இருக்கின்ற சூழ் நிலை இந்த விளிம்பை நோக்கி மக்களின் அவதானம் திரும்பி இருக்கின்றதை அவதானிக்கலாம். தற்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்ஹ என்போரை விட மக்கள் மத்தியில் செல்வாக்கு வாய்ந்தவராக இருக்கின்றார். அவரது உரைகளை சமூக வலைத் தளங்களில் அதிகமானோர் பார்க்கின்றார்கள். அவ்வகையில் எதிர்காலத்தில் இந்த நாட்டின் அரசாங்கத்தை இந்தக் கட்சிகள் அமைக்கலாம்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் ஜனநாயக அரசியலில் ஆர்வம் காட்டிய பிரிவினராக அதிகமாக இளைஞர்கள் இருக்கவில்லை. மாறாக மத்திய வயதினரும் அதற்கு மேற்பட்டவர்களுமே இருந்தார்கள். அவர்களின் வழி காட்டல்களைக் கொண்டே இளைஞர்கள் தீர்மானம் எடுத்தார்கள். அரசியலைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பவர்களாக மூத்தோர்கள் மாத்திரமே இருந்தார்கள். ஆனால் தற்போது இந்த நிலை மாறி இளைஞர் யுவதிகள் அரசியலில் ஆர்வம் காட்டுபவர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். காலி முகத்திடல் போராட்டத்தில் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர். நாட்டில் ஏனைய பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர் இளைஞர்களாக இருக்கின்றார்கள்.

இலங்கை அரசியல் பெரும்பாலும் இனத்தைச் சார்ந்தாக இருந்தது. இலங்கையில் அரசியல் செய்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் இனத்தைக் கொண்டே தமது வலுவை ஸ்தாபித்துக் கெண்டிருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஆதாரமாகக் கொண்ட கட்சியாக இருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களை ஆதாரமாகக் கொண்ட கட்சியாக இருக்கின்றது. இனத்தின் இருப்பே ஒவ்வொரு இன மக்களின் நோக்கமாக இருந்தது. இந்த நாட்டில் தோன்றிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியலில் ஒவ்வொரு இனத்தை முக்கியத்துவப்படுத்துவதே பிரதான காரணமாக இருந்தது. இந்த அரசியல் தனது செல்வாக்கை தற்போது இழந்ததாக இருக்கின்றது. தற்போது பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்டதாக அரசியல் பரிணாமம் பெற்றுக் கொண்டு வருகின்றது. அது, இன, மத பேதங்களைக் கடந்ததாக இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளமன்ற உறுப்பினராக இருக்கின்ற இராசமாணிக்கம் சாணக்கியனின் அதிகமான உரைகள் பெரும்பாலும் நாட்டின் பொதுவான பிரச்சினைகளை கருத்தில் கொண்டதாக இருக்கின்றது. அவை தமழ் மக்களை மாத்திரம் வரையறுத்ததாக இல்லை. தற்போது இனத்தை முக்கியத்துவப்படுத்திய கோஷங்களுக்கு வரவேற்பு இல்லை. மாறாக பொருளாதாரத்தை முக்கியத்துவப்படுத்திய கோஷங்களுக்கே வரவேற்பு கிடைக்கின்றது. இதன் பின்னர் பொருளாதாரத்தை மையப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கே இந்த நாட்டில் தமது அரசியலைச் செய்யலாம். மையப்படுத்தப்பட்ட இனவாதம் பின் தள்ளப்பட்டு விளிம்பு நிலையில் இருந்த பொருளாதாரம் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டு வருகின்றது.

இந்த நாட்டு மக்கள் இவ்வளளவு காலமாக அரசியல் தலமைத்துவத்தின் ஊடாகத் தற்காலிகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே எதிர்பார்த்தனர். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக நீண்ட காலத் திட்டங்களையோ அல்லது நாட்டுக்கான குறிக்கோள்களையோ எதிர்பார்க்கவில்லை. ஓடுகின்ற வண்டி எவ்வாறாவது ஓடினால் போதும் என்கின்ற மன நிலையே இருந்தது. ஆனால் தற்போது நாட்டு மக்களின் இந்தக் கருத்து நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு நீண்ட காலத் திட்டம் இல்லாததன் காரணமாக இந்த நாடு இப்படியான ஒரு நெருக்கடியில் சிக்கி இருப்பதாக மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எதிர்வருகின்ற காலங்களில் தனி நபரை மையப்படுத்திய அரசியல் கலாசாரத்துக்கு மக்கள் வாக்களிப்பது குறைவாக இருக்கும். மாறாகத் தேர்தலில் இந்த நாட்டைப் பற்றிய குறுகிய கால, நீண்ட கால வேலைத் திட்டங்களே முக்கியத்துவம் பெறும். குறிப்பிட்ட நபரை அரசியல் தலைவராகத் தெரிவு செய்தால் இருக்கின்ற பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்கின்ற மக்களின் மனோ நிலை மாறிக் கொண்டு வருகின்றது. அத்தோடு அப்போதைய நிலையை (ஓடுகின்ற வண்டி ஓடினால் போதும்) மாத்திரம் கருத்தில் கொள்ளாது நீண்ட எதிர்காலத்தை கருத்தில் கொள்கின்றவர்களாக வாக்காளர்கள் மாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்த நாட்டின் நிர்வாகத் தலைமைத்துவங்கள் என்பது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்துக்குள் மாத்திரம் கட்டுண்டதாக இருந்தது. அவர்கள் நிலப் பிரபுத்துவ சமுதாயத்தின் எச்சங்களாகவோ முதலாளித்துவத்தின் பிரதி நிதிகளாகவோ அல்லது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்ட குடும்பங்களின் வம்சாவளிகளாகவோ மாத்திரமே இருந்தனர். தற்போதைய நிலையில் இது கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது. இந்த நிலையில் துறை சார்ந்த நிபுணர்கள் நிர்வாகத் தலைமைத்துவத்துக்கு வர வேண்டும் என்கின்ற கருத்து வலு அடைந்து கொண்டு வருகின்றது. அவர்கள் தமது துறையில் நூலறிவை மாத்திரம் மட்டுமல்லாது அனுபவ அறிவையும் பெற்றிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவர்களே இதன் பின்னர் இந்த நாட்டில் நிர்வாகத் தலமைத்துவங்களுக்கு மக்களால் நியமிக்கப்படுவார்கள்.

மேற்குறிப்பிட்ட அரசியல் விளிம்பு நிலைகளின் பால் இந்த நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவதாக காலி முகத்திடலில் இளைஞர்கள் செய்கின்ற போராட்டம் இருக்கின்றது. அவர்கள் அவற்றை சமூக மயப்படுத்துகின்றார்கள். இந்த நாட்டு மக்களே இந்த நாட்டின் வாக்காளர்கள். அந்த வகையில் நோக்குகின்ற போது இந்தப் போராட்டத்தின் நோக்கம் தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிகப் பிரச்சினைகளை மாத்திரம் தீர்ப்பதாக அமையவில்லை. இந்தப் போராட்டம் ஏற்படுத்திய கோட்பாடுகளை இளம் சந்ததியினரிடம் அதிகமாக அவதானிக்கலாம். அவ்வகையில் இது எதிர்காலத்தில் ஒரு பின் நவீனத்துவ அரசாங்கத்தைக் கூட இலங்கையில் அமைக்கலாம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் இந்தப் போராட்டம் மத்திய கிழக்கு மக்கள் புரட்சியை விட வீரியமானதாக எதிர்காலத்தில் பேசப்படும்.

மபாஸ் சனூன்
(விரிவுரையாளர் – கிழக்குப் பல்கலைக்கழகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here