ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் தாங்கள் கையொப்பமிடப் போவதில்லை என்றும், முன்னர் வெளியிடப்பட்ட அனுசரணையாளர்களின் பட்டியல் துல்லியமானது அல்ல என்றும் துருக்கியத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான துருக்கியத் தூதுவர், டெமெட் செகெர்சியோக்லு, கடந்த காலத்திலும் சரி, 51ஆம் ஆண்டிலும் சரி, UNHRC இல் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் துருக்கி இணை அனுசரணை வழங்கவில்லை.
மேலும், சபையின் 51வது அமர்வின் போது 12 செப்டம்பர் 2022 அன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் துருக்கி தலையீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களின் மகத்தான தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த கடினமான காலங்களில் இலங்கை அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று துருக்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானம் ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் அனுசரணையளிக்கப்பட்டது.