நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்

166

காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

உலக நீர் தின விழா இன்று(22) இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடாளவீய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும், கடந்த க.பொ.த உயர் தர பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பது இடைக்கால தீர்வே. அது நிரந்தர தீர்வு அல்ல. எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உள்ளக பொறிமுறையே அவசியம். அதாவது தேசிய உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு உள்ளக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்துள்ள நிலையில், இலங்கை மீது நிதி நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்டவற்றின் உதவியை பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

எமது நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு கூட்டு பொறுப்பு என்பது அவசியம். அதனையே இன்றைய தலைமையினர் எதிர்பார்க்கின்றனர் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here