காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு

131

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) எதிர்வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும்.

மாற்றத்திற்கான கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அனைத்து பங்குதாரர்களுக்கும் புதிய, சமமான தீர்வுகளுக்கு பங்களிப்பைப் பெறுவதும், சமமான வாய்ப்புகளை வழங்குவதும் இந்த மாநாட்டின் குறிக்கோளாகும்.உலகளவில் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும் அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை கையாள்வதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இந்த அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here