மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அரச அங்கீகாரத்துடன் ‘மலையகம் – 200’ விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்கள் கொழும்பிலும் நடத்தப்படவுள்ளது.
மலையக தமிழர்களின் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவையை கௌரவிப்பதற்கு அரசு தீர்மானித்திருந்த நிலையில், அதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கே அமைச்சரால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.