நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ள கொழும்பு க்ரிஷ் கட்டடம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு அமைச்சு மற்றும் அரசாங்கத்துக்குக் காணப்படுவதால் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
க்ரிஷ் கட்டட நிர்மாணத் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள நிர்மாண உபகரணங்கள் காற்றுக்கு விழக்கூடிய அபாயம் உள்ளதாகவும், நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருகக்கூடிய நிலைமை உருவெடுத்துள்ளதாவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக, இந்தக் கட்டடத்தின் மூன்று மாடிகள் பூமியின் மட்டத்திலிருந்து கீழே காணப்படுவதால், அதில் மழை நீர் தேங்கி நின்று டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அதனை அண்மித்திருக்கும் பிரதான சுற்றுலா ஹோட்டல்களிலிருந்து முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் அதிகாரில் இதன்போது தெரிவித்தனர்.