2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.
36 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இதன்மூலம் வீதிகள் எந்தெந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பது அடையாளம் காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக பொதுமக்களுக்கு சேவைகளை உத்தியோகபூர்வமாக வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது 69 உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக செயற்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர,
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளையும் மேம்படுத்தும் வகையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி பொது மக்களுக்கு ஒன்லைன் (ONLINE) தொழில்நுட்பம் ஊடாக சேவைகளை வழங்க அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகள் தவிர்க்கப்படும் என்றும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் நிவர்த்திசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வீதி மின் விளக்குகள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், இதன்மூலம் உள்ளூராட்சி மன்றங்கள் மின்சாரத் தேவைக்கு செலவிடும் பாரியளவு நிதியை சேமிக்க முடியும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் ஒத்துழைப்பைப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றங்களினால் இடம்பெறும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. ஆனாலும் பொது மக்களின் தேவை கருதி 160 புதிய பாலங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் 20 பாலங்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.